tamilnadu

img

தாழ்வாக செல்லும் மின்கம்பி ரூ. 10 லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர்கள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை, ஆக.18 - திருவண்ணாமலை அருகே, உள்ள கிராம பகுதிகளில்  தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக  கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காஞ்சி சாலையில் உள்ள தேவனந்தல், கலசபாக்கம் தாலுகாவில் உள்ள சிறுவள்ளூர் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வாக மின் கம்பி செல்வதாகவும் விபத்து ஏற்படும் முன், அவற்றை சீரமைக்க வேண்டும் என ‘தீக்கதிரில்’ தொடர்ந்து செய்திகள் வெளியானது.  இந்நிலையில், வாழவச்சனூர் பகுதியில் தாழ்வாகச் சென்ற மின் கம்பியால்,  ரூ.10 லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வாணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிர் சாகுபடி செய்து உள்ளனர். வாழவச்சனூர் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனது 1 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். அவருடைய நிலத்தின் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின்சார வயர்கள் தாழ்வாக செல்கிறது. கடந்த வாரம், மின் வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதால் தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பொறி சேகர் நிலத்தில் உள்ள கரும்பு பயிர் மீது விழுந்துள்ளது. இதனால் கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனையடுத்து சேகர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் காற்றின் வேகத்தால் அருகில் உள்ள செல்வம், வேலு, ராஜேந்திரன் ஆகியோரின் நிலத்தில் பயிரிட்டு உள்ள கரும்பிலும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள், வாணாபுரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமானது. எனவே, ஆபத்தை எற்படுத்தும் நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.